கட்டுரை

தடை தாண்டும் ஆட்டம்!

வெற்றிக்கு ஸ்டாலின் செய்யவேண்டியது என்ன? - ஒரு முழுமையான அலசல்

அந்திமழை இளங்கோவன்

பானிபட் போருக்கும் தமிழக அரசியலுக்கும் தொடர்பு இருக்கிறதா? ஆம். முகலாயப் பேரரசனாக அறியப்படும் பாபரின் தொடக்க காலம் பலரும் அறியாத ஒன்று.

தற்போதைய உஸ்பெகிஸ்தானின் ஒரு பகுதியான பெர்கானா பகுதியின் குறுநில மன்னன். ஆரம்பத்தில் பல தோல்விகளை சந்தித்த பாபர், தனது நாட்டை இழந்து நாற்பதுக்கும் குறைவான வீரர்களுடன் மலைகளில் ஒளிந்து மறைந்து வாழ்ந்து வந்தபோது அவரது பாட்டியைச் சந்தித்தார். ‘ ‘ உனது தோல்விகளில் இருந்து என்னவெல்லாம் கற்றுக்கொண்டாய்?'' என்று பாட்டி விசாரித்தாரம். அதற்குப் பின் பல போர்கள் தொடுத்தும் தோல்வியே கிடைத்தது பாபருக்கும். ஒவ்வொரு தோல்விக்குப் பின்னும் தனது நெருங்கிய படைத்தளபதிகளிடம் தோல்விக்கான காரணங்களை விரிவாக விவாதிப்பது உண்டாம். எதிரிகளின் போர்த்தந்திரங்களைப் பற்றிய ஆழமான புரிதல்களுடன் திட்டமிடுவது பாபரின் வழக்கம். அப்போது  காபூலை வென்ற பாபருக்கு ஒட்டமான்கள் பாரசீகர்களை வென்றது ஆச்சரியமூட்டியது. உடனே தனது தளபதியை ஒட்டமான சுல்தானிடம் துப்பாக்கி சார்ந்த பயிற்சிகளுக்கு அனுப்பினார். சுமார் 30 ஆண்டுகள் களங்கள் பல கண்டபின் அக்டோபர் 1525&ல் பாபர் முதல் முறையாக சிந்துநதியை கடந்து அடுத்த ஆண்டு ஏப்ரலில் பானிபட்டை அடைகிறார்.

பாபரின் இலக்கு இப்ராஹிம் லோடி.

பாபரிடம் வெறும் 12000 பேர் கொண்ட படையும் அதில் 4000 பேரிடம் கைத்துப்பாக்கிகள் மட்டுமே இருந்தது.  இப்ராஹிம் லோடியிடம் லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் கொண்ட படை, ஆயிரத்துக்கும் மேற்பட்ட யானைகள். ஆனால் லோடியின் படை நீண்ட வெற்றியின் மதமதப்பில் போர்த்தொழிலை மெல்ல மெல்ல மறந்துவந்த காலகட்டம். பெரிய கட்டமைப்பு, பெரும் படை, எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் தாக்குப்பிடிக்கக்கூடிய வள ஆதாரம் எல்லாம் இருந்தும் லோடியின் படை தோற்றது.

1967 - ல் காங்கிரஸ் தமிழகத்தில் தோற்றதற்குக் காரணம் இவர்கள் லோடியின் படையினரின் தெனாவெட்டுடன் இருந்தது ஒரு முக்கியக் காரணம். திமுக முதல்முதலாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து 50 ஆண்டுகள் ஆனாலும் கட்சி பெரும்பகுதியை மு.கருணாநிதியின் தலைமையில்தான் கழித்துள்ளது. தந்தையின் அணுகுமுறை கட்சிக்குள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் தலைவராக ஸ்டாலினுக்குப் பாரம்தான். அடுத்த தேர்தலில் (அது எப்போது நடக்கும் என்று தெரியாத சூழலில்) எப்படியும் ஜெயித்தாகவேண்டிய கட்டாயத்தில் ஸ்டாலின். திமுக தனது ஆரம்ப காலகட்டங்களில் சந்தித்த பல சிக்கல்களை மீண்டும் சந்தித்துத் திணறுகிறது தொலைக்காட்சி விவாதங்களில். இதில் முதன்மையானது கடவுள் நம்பிக்கை சார்ந்தது. 1946 - ல் பெரியார் கருஞ்சட்டை அணிய வேண்டும் என்று சொன்னதில் அண்ணாவுக்கு உடன்பாடு இல்லாமல் இருந்தது. மதுரையில் நடந்த கருஞ்சட்டை மாநாட்டுக்கு அண்ணா செல்லவில்லை. பின்னர் நடந்த கும்பகோணம் மாநாட்டுக்கு முக்கியமான கட்சித் தலைவர்கள் எல்லாம் கருஞ்சட்டையில் இருக்க அண்ணா வெள்ளை சட்டையுடன் வந்தார்.

பரந்த கூட்டத்தை அடையவேண்டும் என்பதற்காக ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையை அண்ணா கையில் எடுத்து எழுபது ஆண்டுகள் ஆகிறது என்பதை செயல் தலைவர் ஸ்டாலின்  தன்  தொண்டர்களுக்கு ஞாபகப் படுத்தவேண்டும்.

எம்ஜிஆரை சீண்டிப்பார்க்கும் முயற்சியில் ஒரு வாரப்பத்திரிகையில் கண்ணதாசன் தொடர் எழுதினார். ஆரம்பித்த சில வாரங்களுக்குள் எம்ஜிஆர் அவரை அரசவை கவிஞர் ஆக்கினார். எம்ஜிஆர் வென்றதாகக் கூறி தொடரை நிறுத்திவிட்டார் கவிஞர். தங்களது கழகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் வெற்றிக்கும் முட்டுக்கட்டை போடுபவர்கள் யார் யார் என்று ஸ்டாலினுக்குத் தெரியும். ஆனால் அவர்களை வழிக்குக் கொண்டுவரப் போதுமான முயற்சிகள் எடுக்கப்படவில்லை. வெற்றியை உறுதிசெய்ய இது தேவையான ஒன்று.

பரந்துபட்ட துறைசார் வல்லுநர்களிடம் கருணாநிதி தொடர்பு வைத்திருந்தார். எப்போதும் ஒரு சிறுகுழு அவரை ஆலோசனைச் சிறையில் அடைக்க முடிந்தது இல்லை. இதுவே கழகத்தின் பலமாக பலகாலம் இருந்தது.

ஜெ ஆட்சியில் இருந்த போது யார் எம்.எல்.ஏ ஆவார்கள்? யாருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும்? எவ்வளவு காலம்? என்றெல்லாம் சுவாரசியமான எதிர்பார்ப்பு இருக்கும். வாய்ப்புக் கிடைக்கும் என எதிர்பார்ப்பில் தொண்டர்கள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். ஆனால் திமுக வெற்றிபெற்றால் யார் யார் எம்எல்ஏ, யார் யார் அமைச்சர்கள் என்பது நிரந்தரமாக எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகவே இருக்கும். இதில் ஐம்பது சதவீதமாவது மாறுதல் இருந்தால்தான் மக்களிடம் சுவாரசியமிருக்கும். கழகத்தில் சுறுசுறுப்பு இருக்கும்.

இன்று திமுகவில் செல்வாக்குப் பெற்றிருக்கும் பலருக்கும் கழகத்தின் வரலாறு தெரிவதில்லை என்ற கருத்து திமுகவினரிடமே உள்ளது. ‘‘நீங்க ஆட்சிக்கு வந்தா எப்படி தமிழகத்தின் வருமானத்தை உயர்த்துவீர்கள் அதற்கு உங்கள் செ.தலைவரிடம் திட்டம் இருக்கிறதா என்று நிருபர் கேட்டான். நான் ஏதோ சொல்லி சமாளிச்சிட்டேன்,'' இது இரு முக்கிய திமுக தலைவர்களுக்கு இடையே நடந்த உரையாடல். ஓட்டுக்கேட்ட மூத்த நிருபர், ‘‘ எங்க செ,தலைவர் சென்னை மேயரானபோது(1995-96)மாநகராட்சியின் வருமானம் 217 கோடிகள். 2001-02ஆம் ஆண்டில் 424 கோடியாக உயர்ந்தது. தமிழகத்தை அவரிடம் கொடுத்துப்பாருங்கள் என்று பதில் சொல்லியிருக்கணும்,'' என்று பெருமூச்சு விட்டார். எந்த பந்தை எப்படி அடிக்கவேண்டும் என்ற பயிற்சி மேலும் தேவை.

சமீபத்திய கருத்துக் கணிப்புகள் தற்போது தேர்தல் நடந்தால் ஸ்டாலின் தான் முதல்வர் என்று கூறுகின்றன. இந்த நிலை தேர்தல் வரை தொடர வேண்டும் என்றால் நிறைய உழைப்பு தேவைப்படுகின்றது. 1962 - ல் தேர்தலில் தோற்றிருந்த அண்ணா, நாம் தேர்தல் களத்தில் பேசும் பேச்சை விட சாதாரண நாட்களில் செயல்படும் விதமும் பேசும் பேச்சும் மக்கள் மனதில் பதியும் என்ற பொருளில் பேசியிருப்பார்.

பெயருக்கு செ.தலைவர் என்றாலும் கடந்த ஓராண்டுகாலமாக ஸ்டாலின் தான் திமுகவின் தலைவர். அவரின் செயல்பாட்டைக் குறித்து கட்சிக்கு வெளியே உள்ளவர்களின் 360 கோணப் பார்வைதான் இந்தத் தொகுப்பு.

மார்ச், 2018.